தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? – டிடிவி தினகரன் கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? – டிடிவி தினகரன் கேள்வி

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? – டிடிவி தினகரன் கேள்வி

எதிர்க்கட்சியினர் மீதான புகார்களில் வேகமாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, ஆளுங்கட்சியினர் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது மட்டும் ஏன் மௌனம் காக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜோசப் விஜய்யை பொதுக்கூட்டங்களிலும் சமூக வலைதளங்களிலும் விமர்சிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது, தொடர்ந்து விசாரணை நடத்துவது, நள்ளிரவிலும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது என தவெக அரசும் அதன் காவல்துறையும் அதிவேகமாகச் செயல்படுகின்றன. ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது புகார்கள் எழும்போது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமமுக சட்டமன்ற உறுப்பினரிடம் ஆட்சி அமைப்பதற்காகக் குதிரை பேரம் நடத்தி ரகசியமாகக் கையெழுத்து பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சொந்தக் கட்சியினரிடையே பேரம் பேசியதாக நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்காகத் தானே லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட அமைச்சர், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக தன்னிடம் ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வாக்குமூலம் அளித்த அமைச்சர் என ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தனை புகார்கள் இருந்தும் அவற்றின் மீது குறைந்தபட்ச முதற்கட்ட விசாரணையைக்கூடத் தொடங்காத அரசும் காவல்துறையும், எதிர்க்கட்சியினர் மீதான புகார்களில் மட்டும் தீவிரம் காட்டி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது பொய்வழக்குகள் மூலம் அரசியல் பழிவாங்கும் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் காவல்துறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியின் அரசியல் நோக்கங்களுக்கான கருவியாகச் செயல்படக் கூடாது. எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பதும், ஆளுங்கட்சியினர் மீதான புகார்களைப் புறக்கணிப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீதான புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. எனவே, ஆளுங்கட்சியினருக்கு ஒரு நடைமுறை, எதிர்க்கட்சியினருக்கு மற்றொரு நடைமுறை என்ற பாரபட்சமான போக்கைக் கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஆளுங்கட்சியினர் மீதான புகார்களையும் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.