தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில், நடப்பு நிதியாண்டில் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ரூ.3,000 கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் தொடர்புடைய தொழில்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நிதியாண்டில் ரூ.3,000 கோடி கடன் வழங்க கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்திற்கு ரூ.440 கோடிகடன் வழங்கப்பட உள்ளது. மேலும், வேளாண் சாகுபடிக்காக பெறப்பட்ட பயிர்க் கடனை முழுமையாக நிலுவையின்றி திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு, புதிய கடன்களை இந்த மாதம் 30-ம் தேதிக்குள் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.