தமிழகத்தில் வரும் 7 நாட்களில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று (செப். 23) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. இது இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்தது. செப். 24: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். செப். 25: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இதே நிலை காணப்படலாம். தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப். 26: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. செப். 27 முதல் 30 வரை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை நிலவரம் செப். 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். செப். 26 முதல் 28 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், சற்று உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் வானிலை இன்று (செப். 24) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும். நாளை (செப். 25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம். மீனவர்களுக்கு எச்சரிக்கை செப். 24 அன்று வடதமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. செப். 25 அன்று வடதமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். செப். 26 முதல் 28 வரை இப்பகுதிகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. மேலும், செப். 24 அன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் பிற்பகல் வரை மணிக்கு 55-65 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் காற்று வீசலாம். மாலை முதல் காற்றின் வேகம் 50-60 கி.மீ. ஆகவும், இடையிடையே 70 கி.மீ. ஆகவும் இருக்கக்கூடும். செப். 25 காலை வரை படிப்படியாக காற்றின் வேகம் குறைந்து, பின்னர் மேலும் குறைய வாய்ப்புள்ளது. செப். 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். செப். 26 முதல் 28 வரை இப்பகுதிகளுக்கும் எச்சரிக்கை இல்லை. இதனால், மேற்கண்ட எச்சரிக்கை காலங்களில் மீனவர்கள் குறிப்பிடப்பட்ட கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.