தமிழகத்தில் 52 முக்கிய கோவில்களில் இன்று முதல் மொபைல் போன்களுக்கு தடை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Sep 2026 www.thinathulir.com

தமிழகத்தில் 52 முக்கிய கோவில்களில் இன்று முதல் மொபைல் போன்களுக்கு தடை

தமிழகத்தில் 52 முக்கிய கோவில்களில் இன்று முதல் மொபைல் போன்களுக்கு தடை

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 52 முக்கிய கோவில்களில் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்லும் நடைமுறை இன்று (செப். 1) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க கோவில் வளாகங்களிலேயே சிறப்பு வைப்பறை மற்றும் லாக்கர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில்களுக்கு வரும் சில பக்தர்கள் பிரகாரங்கள் மற்றும் சிற்பங்கள் முன்பு செல்போனில் செல்ஃபி, ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கருவறையில் உள்ள சுவாமி சிலைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து பகிரும் சம்பவங்களும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் கோவிலின் புனிதத்தன்மையை பாதிப்பதுடன், மற்ற பக்தர்களின் வழிபாட்டுக்கும் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ராஜஸ்தானைச் சேர்ந்த இரு தம்பதிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ரீல்ஸ் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 52 கோவில்களில் இன்று முதல் மொபைல் போன் கொண்டு செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான வைப்பிடத்தில் ஒப்படைத்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். இதற்காக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்களிடம் இருந்து பெறப்படும் மொபைல் போன்களை பாதுகாப்பாக பராமரித்து, பின்னர் உரியவர்களிடம் பத்திரமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவில்களின் புனிதத்தன்மையை காக்கவும், வளாகத்திற்குள் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் பதிவு செய்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்த பக்தர் சாந்தி, இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். கோவிலுக்குள் செல்லும்போதும் பலர் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருப்பது இடையூறாக இருப்பதாகவும், மொபைல் போன் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதித்திருப்பது நல்ல முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாதாரண மொபைல் போன்களுக்கு விலக்கு இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், பக்தர்கள் கோவில்களில் அமைதியான சூழலில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைத் திருக்கோவில்களில் மட்டுமே தற்போது இந்த மொபைல் போன் தடை நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் ஏற்கனவே மொபைல் போன் பயன்பாட்டுக்கு தடை அமலில் இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பல்வேறு கோவில்களில் சுவாமி சிலைகளை புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். கேமரா வசதியுள்ள மொபைல் போன்களை பக்தர்கள் முடிந்தவரை தங்களது வாகனங்கள் அல்லது தங்கும் அறைகளில் வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில், கோவில்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவசர தேவைகள் ஏற்படும் நேரங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக கோவில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண மொபைல் போன்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். கோவில்களில் அமைதியான, ஆரோக்கியமான மற்றும் ஆன்மிக வழிபாட்டு சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.