வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்த இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தின் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழாவை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்களை தவிர்த்து, இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 5,501 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. இதற்காக எர்ணாவூரில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, வடசென்னை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. இதனையொட்டி, காப்பு கட்டி 10 நாட்கள் மேற்கொள்ளப்படும் சிறப்பு விரதமும் தொடங்கியுள்ளது.