தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் இணையவழியில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் நைஜீரியாவைச் சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர். அரசு துறையிலும் ஊடுருவிய இணைய மோசடி வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடும் டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை குறிவைத்து நடைபெறும் இத்தகைய குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை பெரும்பாலும் தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கணக்குகளை குறிவைத்து நடந்த இணையவழி மோசடிகள், தற்போது அரசு துறைகளின் நிதி பரிவர்த்தனைகளிலும் ஊடுருவியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித்துறையின் நிதி பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகளை இணையவழியில் ஊடுருவி, மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து மொத்தம் ரூ.22.10 கோடி திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் பணம் திருட்டு முதற்கட்ட விசாரணையில், தமிழகத்தில் உள்ள மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் வங்கி கணக்குகளில் இருந்து பெரும் தொகை மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில், ஒரு ஊராட்சி ஒன்றியத்தின் கணக்கில் இருந்து ரூ.5 கோடியும், மற்றொரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ரூ.3.10 கோடியும், தாம்பரம் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14 கோடியும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் நிதி பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்படும் கணக்குகளில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் பறிக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இணையவழி தாக்குதல் நைஜீரியாவில் இருந்து நடத்தப்பட்டதா, திருடப்பட்டபணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, மோசடி செய்யப்பட்ட தொகையை மீண்டும் மீட்க முடியுமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு நிதி பரிவர்த்தனைகளுக்கே இணையவழி பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சம்பவம், அரசு பணத்தின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.