தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.1.73 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவெக அரசு அமைந்தது முதல் தமிழகத்தின் பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சோதனைகளில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகராட்சி, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட 36 அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணமும், ஜிபே மூலம் பெறப்பட்டதாக கூறப்படும் ரூ.1.59 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம், 36 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 மதிப்பிலான லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.