தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் முழுமையாகக் கிடைக்கவில்லை எனக் கூறி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 15 நாட்கள் அடிப்படையில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் அளவு குறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைகளை வழங்கி வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது ஆலோசித்து முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நான்கு மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையைப் பரிசீலித்த ஆணையம், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரைத் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.