தாம்பரம்:தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள விமானப் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பள்ளியில் (FIS), பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 54 விமானிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமானப்படை மேற்குப்பகுதி தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஜார்ஜ் தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பயிற்சியை நிறைவு செய்தவர்கள் விமானிகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சியின் 161-வது தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 42 பேரும், இந்தியக் கடற்படையைச் சேர்ந்த 7 பேரும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 பேரும், இந்தியக் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 2 பேரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், நட்பு நாடுகளைச் சேர்ந்த 3 விமானிகளும் இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி 24 வாரங்கள் நடைபெற்றது. இதில் 10 கட்டங்களாக விமானப் பயிற்சியும், 200 மணி நேரத்துக்கும் அதிகமான தரைவழிப் பயிற்சியும் இடம்பெற்றன. பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விமானிகளுக்கு ‘விமானப் பயிற்சி பயிற்றுவிப்பாளர்’ என்பதற்கான சிறப்புச் சின்னம் வழங்கப்பட்டது. விமானப் பயிற்சி மற்றும் தரைவழிப் பாடங்களில் சிறப்பாக செயல்பட்ட விமானிகளுக்கு ஏர் மார்ஷல் ஜார்ஜ் தாமஸ் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார். இவ்வாறு இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.