சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விழா நடைபெற இருந்த நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, விழாவுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது. விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் மற்றும் முரசொலி செல்வம் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, பெரியார் விருது விவசாய அணியின் துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கும், அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷுக்கும் வழங்கப்பட்டது. கலைஞர் விருது திருச்சி சிவாவுக்கும், பாவேந்தர் விருது கனிமொழி என்.வி.என். சோமுவுக்கும், பேராசிரியர் விருது மிசா எஸ். அகமது தம்பிக்கும் வழங்கப்பட்டது. மேலும், மு.க.ஸ்டாலின் விருது நா. இளையராஜாவுக்கும், முரசொலி செல்வம் விருது ஊடகவியலாளர் ப. திருமாவேலனுக்கும் வழங்கப்பட்டது. 7 பேருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.