திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை ஆதாரங்களுடன் எடுத்துக்கூறியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டசபையில் 45 நிமிடங்கள் பேசியதாகவும், அதன்பின்னர் காவல்துறை சார்பில் 10 நிமிடங்கள் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதன் தொடர்ச்சியாக, எந்தவித ஆதாரமும் இல்லாமல் முதலமைச்சர் விஜய் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தானும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்குமாறு சபாநாயகரிடம் கோரியதாகவும், ஆனால் வாய்ப்பு வழங்கப்படாததால் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், திமுக எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். இன்னும் 3 நாட்கள் அவகாசம் இருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் மனப்பாடம் செய்ததை ஒப்புவிப்பது போல பேசியதாகவும், அவரது உரையில் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனங்களே அதிகமாக இருந்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.முதலமைச்சர் விஜய்யின் உதவியாளர் விஷ்ணு, கனிம வளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அந்த ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.திமுக ஆட்சியில் வழக்குகள் இருப்பதாக முதலமைச்சர் விஜய் கூறியதை சுட்டிக்காட்டிய உதயநிதி, சென்னையில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை குறித்து பதிலளிக்காமல் 1970-ம் ஆண்டுக்குச் சென்றுவிட்டதாக விமர்சித்தார். மிசா குறித்து பேச விஜய்க்கு தகுதி இல்லை என்றும், சர்க்காரியா கமிஷன் குறித்து அவருக்கு ஏதேனும் தெரியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், விஜய் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து என்றும் கடுமையாக விமர்சித்தார்.அமலாக்கத்துறை முன்வைத்தவை குற்றச்சாட்டுகள் மட்டுமே என்றும், அவை இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் உதயநிதி தெரிவித்தார். சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகும் திமுக 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அதேபோல், எதிர்தரப்பு அமைச்சர்கள் மீதும் வழக்குகள் இருப்பதாக கூறிய உதயநிதி, திமுகவை அச்சுறுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் நேருவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். எந்தவித மிரட்டல்களுக்கும் திமுக பயப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.