தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையான நாளை (நவம்பர் 8) தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.