நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பண்டிகைக் காலங்களில் சில இளைஞர்கள் சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் பல்வேறு சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சென்னை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, நகரின் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் சாகசச் செயல்களைத் தடுக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக சென்னை காவல்துறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விழிப்புணர்வுப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் பைக் சாகசங்களுக்கு அனுமதியில்லை என்றும், பொதுச் சாலைகளை சாகசம் செய்வதற்கான இடமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.