தீபாவளி பண்டிகை எதிரொலி... சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தீபாவளி பண்டிகை எதிரொலி... சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு

தீபாவளி பண்டிகை எதிரொலி... சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சமையல் எண்ணெய்க்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால் அதன் விற்பனையும் உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெயின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை குறைத்துள்ள போதிலும், பண்டிகை காலம் தொடங்கியதால் எண்ணெய் வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட தாவர எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரதாசன் கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு ஆர்டர்கள் அதிகரித்திருப்பதால் சமையல் எண்ணெய் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக கடந்த மாதத்தை விட ஒரு லிட்டர் எண்ணெயின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் பாதிப்புகள் இருந்தபோதிலும், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை குறைத்தது. சுத்திகரிக்கப்படாத பாமாயில் மற்றும் சோயா எண்ணெய்க்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டது. இதற்கிடையே, எண்ணெய் விலைகளிலும் உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் லிட்டர் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில், அக்டோபரில் ரூ.140 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், லிட்டர் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.160 ஆக உயர்ந்துள்ளது.