தனியார் பால் விலை உயர்வு: ஆவினுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தனியார் பால் விலை உயர்வு: ஆவினுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்

தனியார் பால் விலை உயர்வு: ஆவினுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்

ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் விலையை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவை சமாளிக்கும் வகையில், தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தியுள்ளன. கடந்த 21-ந்தேதி ஆரோக்யா நிறுவனம் விலையை உயர்த்திய நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா, ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்களும் நேற்று முதல் புதிய விலையை அமல்படுத்தியுள்ளன. பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரையும், தயிர் விலை கிலோவுக்கு ரூ.2 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, அரை லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.59-ல் இருந்து ரூ.61 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68-ல் இருந்து ரூ.70 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.78-ல் இருந்து ரூ.81 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. அதேபோல், அரை கிலோ தயிரின் விலை ரூ.41-ல் இருந்து ரூ.42 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிரின் விலை ரூ.36-ல் இருந்து ரூ.37 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்துவது இது 3-வது முறையாகும். இதன் மூலம் ஓராண்டில் தனியார் பால் பாக்கெட்டுகளின் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. தற்போதைய விலை உயர்வால் ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனை விலைகளுக்கு இடையிலான வித்தியாசமும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.14 முதல் அதிகபட்சம் ரூ.30 வரை விலை வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் கவனம் ஆவின் பால் பக்கம் திரும்பும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நிலவும் ஆவின் பால் தட்டுப்பாடு, தமிழ்நாடு முழுவதும் மேலும் அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.