கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்குப் புறப்பட்டார். கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 7 தளங்களுடன் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், கோவை விமான நிலையத்தைச் சென்றடைகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். 10 கி.மீ. தூரம் ரோடு ஷோ விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வழியாக காந்திபுரத்தில் உள்ள விழா நடைபெறும் இடத்துக்கு விஜய் ரோடு ஷோவாகச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது வழிநெடுகிலும் பொதுமக்களைச் சந்திக்க உள்ளார். காலை 11.45 மணிக்கு பெரியார் அறிவுலகத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும், அறிவுலகத்தைக் குறிக்கும் கல்வெட்டையும் அவர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து நூலகத்தின் வரவேற்பறை, குழந்தைகள் நூலகம், புத்தக வாசிப்புப் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிடுகிறார். இதன்பிறகு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்லும் விஜய்க்கு, அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளித்து நினைவுப் பரிசுகளை வழங்குகின்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விஜய் கோவை மாவட்டத்தில் நிறைவடைந்துள்ள பல்வேறு திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கோவையில் நடைபெறும் அரசு விழாவில் விஜய் முதன்முறையாகப் பங்கேற்கிறார். இதனால் அவரைக் காணவும், வரவேற்கவும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அவினாசி சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய்யின் வருகையை முன்னிட்டு த.வெ.க.வினர் உற்சாகத்துடன் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். நூலக வளாகத்தில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் முதல் காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகம் வரை 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் தொடங்கி காந்திபுரம் பெரியார் அறிவுலகம் வரை சுமார் 11.4 கிலோமீட்டர் தூரத்துக்கு விஜய்யின் ரோடு ஷோ நடைபெற உள்ளது. அவரை நேரில் காணவும் வரவேற்கவும் த.வெ.க. தொண்டர்களும் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.