தேனியில் போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் உயிரிழப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
09 Nov 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Nov 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தேனியில் போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் உயிரிழப்பு

தேனியில்  போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் உயிரிழப்பு

தேனி சமதர்மபுரம் அருகே மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) செந்தில் குமார் உயிரிழந்தார். காவல் அதிகாரி தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி சமதர்மபுரம் பகுதியில் நேற்று மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்தபடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது அவ்வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்குமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்துள்ளனர். இதையடுத்து, விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களை எஸ்.எஸ்.ஐ. தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், செந்தில் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் இரவோடு இரவாகப் போலீசார் குவிக்கப்பட்டனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமாரைத் தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களைத் தட்டிக்கேட்ட காவல் அதிகாரியே தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.