தென்காசி: வியாபாரியை காரில் கடத்தி நகை பறித்த இளம்பெண் உள்பட 4 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தென்காசி: வியாபாரியை காரில் கடத்தி நகை பறித்த இளம்பெண் உள்பட 4 பேர் கைது

தென்காசி: வியாபாரியை காரில் கடத்தி நகை பறித்த இளம்பெண் உள்பட 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வியாபாரியை காரில் கடத்திச் சென்று, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றதாக இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் பிரதான கடை வீதியில் செயல்பட்டு வரும் பஞ்சு மெத்தை கடையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் சந்தானகிருஷ்ணன் (76). வியாபாரியான இவர் சம்பவத்தன்று மாலை கடையில் இருந்தார். அப்போது தலையணை வாங்குவது போல் வந்த சிலர், அவரை பேச்சில் ஈடுபடுத்தி காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காரில் வைத்து சந்தானகிருஷ்ணன் அணிந்திருந்த சுமார் 3 சவரன் நகைகளை பறித்த அந்த கும்பல், அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடையநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகள் சுபா (19) என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சந்தானகிருஷ்ணன் பணியாற்றிய பஞ்சு மெத்தை கடை வளாகத்தில் இருந்த அடகு கடையில் சுபா தனது நகையை அடகு வைத்திருந்ததாகவும், அந்த அடகு கடையை சந்தானகிருஷ்ணனே மேற்பார்வையிட்டு வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நகைக்கு அதிக வட்டி கேட்டதாகக் கூறி சந்தானகிருஷ்ணனுக்கும் சுபாவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுபா தனது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் உதவியுடன் சந்தானகிருஷ்ணனை காரில் கடத்திச் சென்று நகையை பறித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுபா மற்றும் அவரது நண்பர்களான நெல்லை பாளையங்கோட்டை குலவணிபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் லட்சுமணன் (25), நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தனமாரியப்பனின் மகன் சந்துரு (24), கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் மனோ (23) ஆகிய 4 பேரையும் கடையநல்லூர் போலீசார் கைது செய்தனர்.