புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், தி.மு.க. சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்தி குமாரி உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 21,756 பேர் வாக்களித்தனர். இவர்களில் 10,056 பேர் ஆண்கள், 11,695 பேர் பெண்கள், 5 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் 87.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், தற்போதைய இடைத்தேர்தலில் 80.81 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. இதன் மூலம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் வாக்குப்பதிவு 6.29 சதவீதம் குறைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் கணக்கிடப்படுகின்றன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் நான்கு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. முதல் மூன்று சுற்றுகளில் தலா 8 வாக்குச்சாவடிகளின் வாக்குகளும், இறுதிச் சுற்றில் 7 வாக்குச்சாவடிகளின் வாக்குகளும் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய இரண்டு மணி நேரத்தில், அதாவது காலை 10 மணியளவில், முன்னிலையில் உள்ள வேட்பாளர் குறித்த முதல் கட்டத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11 மணிக்குள் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.