திண்டுக்கல்: வடமதுரை அருகே மின்வாரியத்தில் சமர்ப்பிக்க தடையில்லா சான்று பெறுவதற்காக விவசாயியிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விஏஓ பாண்டியராஜன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், மின்வாரியத்திடம் வழங்குவதற்கான தடையில்லா சான்று பெற விஏஓ பாண்டியராஜனை அணுகியுள்ளார். அப்போது சான்று வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சமாக பாண்டியராஜன் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் வழங்க விரும்பாத கோவிந்தராஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை பாண்டியராஜனிடம் அவர் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பணத்தை பெற்ற பாண்டியராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்ததாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற முன்னாள் கிராம உதவியாளர் ராமலிங்கத்தையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சர்வேயர் மாரிராஜ் (36) மற்றும் லஞ்சப் பணத்தை வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படும் புரோக்கர் ஜெகதீஷ் (23) ஆகியோரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.