காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் பதிலுரை வழங்கினார். அப்போது, திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக அமலாக்கத்துறை முன்வைத்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பேசினார்.கடந்த ஆட்சியில் திமுக ஆட்சியின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றதாகவும், கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதி மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு பணம் சென்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும் முதல்-அமைச்சர் விஜய் குறிப்பிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், தங்களது தரப்பு கருத்துகளை தெரிவிக்க சட்டசபையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அப்போது, முதல்-அமைச்சர் விஜய்யின் இருக்கைக்கு முன்பாக திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் எழுந்திருக்க முயன்றபோது தடுமாறினார்.இதைக் கவனித்த முதல்-அமைச்சர் விஜய், துரை சந்திரசேகரனின் கையைப் பிடித்து அவரை எழுந்து நிற்க உதவினார். மேலும், அவர் தர்ணாவில் அமர்வதற்கு வசதியாக தனது டேபிளை சற்று பின்னால் இழுத்து வைத்தார்.முதல்-அமைச்சர் விஜய், திமுக எம்.எல்.ஏ.வுக்கு உதவும் இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.