தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம்

தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று  கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காளி பூஜையில் திரண்ட பக்தர்கள் தசரா திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விநாயகர் பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. கடற்கரையில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 108 சங்கு பூஜை, 108 கலச பூஜை ஆகியவை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து முத்தாரம்மனுக்கு காளி பூஜை நடைபெற்றது. காளி வேடம் அணிவதற்காக விரதம் மேற்கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். மதிய வேளையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு அன்னபூஜை நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது. இதையடுத்து மகா அலங்காரத்தில் அம்மனுக்கு காளி பூஜை தீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் விழாவின் தொடக்க நிகழ்வாக இன்று அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலாவாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்கு கொண்டுவரப்படும். அதன்பிறகு காலை 5 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்படும். விரதம் இருக்கும் பக்தர்களுக்கும் காப்பு அணிவிக்கப்படும். 20-ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் 10-ம் திருநாளான வரும் 20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.