‘தங்கம்தான் ராதாவின் பலவீனம்’ - அம்பிகா பரபரப்பு பேட்டி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘தங்கம்தான் ராதாவின் பலவீனம்’ - அம்பிகா பரபரப்பு பேட்டி

‘தங்கம்தான் ராதாவின் பலவீனம்’ - அம்பிகா பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து, குடும்ப ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றவர்கள் சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா. இருவரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இருவரும், தங்களது சொந்த தொழில் சார்ந்த பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், சுமார் ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ராதா தனது புகாரில், ‘ஆர்.ஆர். கார்டன்’ என்ற பெயரில் தொழில் செய்து வருவதாகவும், சென்னை வரும்போதெல்லாம் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் தரைத்தளத்தில் தங்குவதாகவும் தெரிவித்துள்ளார். அதே பகுதியில் தங்கியிருந்த அம்பிகா, தனது அறைக்கு வந்து சென்று கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களின் ஊதியம், மின்சார கட்டணம், சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், தோட்ட பராமரிப்புக்கான செலவுகள் உள்ளிட்டவற்றை செலுத்துவதற்காக, தனது கையெழுத்திட்ட 5 அல்லது 6 காலிக் காசோலைகளை அறையில் வைத்திருப்பது வழக்கம் என்றும் ராதா கூறியுள்ளார். இந்த கையெழுத்திட்ட காசோலைகளை அம்பிகாவும், குஞ்சன் நாயரும் எடுத்துக்கொண்டு வங்கியில் பணமாக்க முயன்றதாகவும், இது சட்டவிரோதமான செயல் என்றும் தனது புகாரில் ராதா தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அம்பிகா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராதா தொடர்ந்த வழக்கு தொடர்பான செய்திகளில் ரூ.43 கோடி, ரூ.46 கோடி என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொகைகள் குறிப்பிடப்படுகின்றன. ராதா எனக்கு காசோலை கொடுத்தது உண்மை. பின்னர் அந்த காசோலையை அவரே நிறுத்தி வைத்ததும் உண்மை. ஆனால், அதற்கான காரணம் என்ன என்பதை ராதா தெரிவிக்கவில்லை. ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் நிறுவனம் எனக்கு குழந்தை போன்றது. அதற்கு பெயர் வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றபோது, ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் என்ற பெயருக்குப் பதிலாக வேறு பெயர் இருந்ததை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். அந்த நிறுவனத்தின் பங்கு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. ஏ.ஆர்.எஸ். என்ற பெயரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்திலும் எனக்கு பங்கு உள்ளது. இதுகுறித்து பேசுவதற்கும் ராதா தயாராக இல்லை. தங்கம்தான் ராதாவின் பலவீனம். தங்கத்தைப் பார்த்தால் ராதா ஒரு மாதிரியாகிவிடுவார். என்னுடைய தங்கம் அதிக அளவில் அவரிடம் இருக்கிறது. அது குறித்தும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இரவில் தூங்கும்போதுகூட தனது கைப்பையை பூட்டி, நம்பர் லாக் போட்டு வைத்துக்கொள்ளும் அளவுக்கு ராதா மிகவும் கவனமாக இருப்பவர். அப்படியிருக்கும்போது, கையெழுத்திட்ட காசோலையை வீட்டில் வைத்திருந்ததாக அவர் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? எனது சகோதரி ராதா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்திருப்பது வேதனையாக உள்ளது. அவர் செல்போனில் அழைத்தபோது நான் அழைப்பை எடுக்கவில்லை என்கிறார். ஆனால், அவரது மகளின் திருமணத்தில் நான் முன்னின்று பணிகளை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் அழைத்தால் நான் ஏன் அழைப்பை எடுக்காமல் இருக்க வேண்டும்? வீட்டு விவகாரத்தை குடும்பத்திற்குள்ளேயே பேசி முடித்துக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ராதா எனக்கு வழங்க வேண்டிய பணத்திற்காகவே 3 காசோலைகளை கொடுத்தார்” என்று அம்பிகா தெரிவித்தார்.