“டோரதி போன்ற படம் வந்ததற்கு பெருமைப்படுகிறேன்” - தமிழரசன் பச்சமுத்து தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளுக்காக அறியப்படும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் ‘டோரதி’ பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெளியானது முதல் ‘டோரதி’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. திரையுலகைச் சேர்ந்த நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்கள் மூலம் படத்தைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமாவில் இருந்து ‘டோரதி’ போன்ற திரைப்படம் உருவாகியிருப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இடம்பெற்றுள்ள அதே திரைத்துறையில் தானும் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, “கார்த்திக் சுப்பராஜுக்கு சல்யூட்!”என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழரசன் பச்சமுத்துவின் இந்த பாராட்டு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.