டெல்லியில் நடைபெற உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதல், ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதிலும், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் இந்தப் பயணம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையடுத்து, 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இதன் மூலம் இந்தியா-சீனா உறவில் புதிய முன்னேற்றத்துக்கான வாய்ப்பு உருவாகலாம் என கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற முறைசாரா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். அதற்கு முன்பு, 2016-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார். மேலும், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முறையாக இந்தியா வந்தபோது பிரதமர் மோடியுடன் ஜி ஜின்பிங் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களின் பதவிக்காலத்தின் தொடக்க ஆண்டுகளில் நடைபெற்ற முக்கியமான சந்திப்புகளில் இதுவும் ஒன்றாகும். இந்த முறை நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் வெளியுறவுத் தலைவர் மௌரோ வியெய்ரா உள்ளிட்ட மேலும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.