தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா-1 பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த குடோனில் மருத்துவமனைகள் உள்ளிட்ட தொழில்துறை தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று வாகனம் மூலம் கொண்டு வரப்பட்ட சிலிண்டர்களை ஊழியர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் இருந்த சிலிண்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 5 ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஓக்லா-1 பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.