டெல்லி கட்டிட விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

டெல்லி கட்டிட விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு

டெல்லி கட்டிட விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தலைநகர் டெல்லியின் தென்பகுதியில் உள்ள சத்யா நிகேதன் பகுதி, மாணவர்கள் தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள இடமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் பல அடுக்குமாடி வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டு, பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பலர் இங்கு தங்கியுள்ளனர். சத்யா நிகேதன் பகுதியில் நானக்புரா குருத்வாரா அருகே 5 மாடிகளைக் கொண்ட பழமையான கட்டிடம் ஒன்று மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்தது. 15-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் கேரளா, அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர். 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்ட இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே, டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த சூழலில் நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்துக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளை தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட அவசரகால மீட்புப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். மீட்புப் பணியின் ஆரம்பகட்டத்தில் 11 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இன்று 2-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டெல்லி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் வகையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் டெல்லி காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.