தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (அக்டோபர் 21) வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்வில் பங்கேற்க அனுமதி பெற்றவர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் செப்டம்பர் 9-ம் தேதி வரை பெறப்பட்டன. பின்னர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு மொத்தம் 846 இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் குரூப் 1 பதவிகளுக்கு 43 இடங்களும், குரூப் 2 பதவிகளுக்கு 803 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கான தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? தேர்வாணையத்தின் அறிவிப்பின்படி, அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறை பதிவு (OTR Dashboard) கணக்கில் உள்நுழைந்து, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு வழிமுறைகளை விண்ணப்பதாரர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது. தேர்வரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம், தேர்வு மையம், அதன் முகவரி ஆகியவற்றை நுழைவுச்சீட்டில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்; அனுமதிக்கப்படாத பிற பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.