டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்த பிறகும், தனது கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது மனதளவில் மிகவும் கடினமான அனுபவமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சூர்யகுமார் யாதவ். இருப்பினும், உலகக் கோப்பைக்குப் பிறகு அவரது பேட்டிங் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிய அளவில் சோபிக்காததால், இந்திய அணியில் தனக்கான இடத்தை இழக்க நேரிட்டது. உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டனாக இருந்தவர், சில மாதங்களிலேயே அணியில் இடம்பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது கடினமான அனுபவம் குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகான காலம் தனக்கு மிகவும் சவாலானதாக இருந்ததை ஒப்புக்கொண்டார். அந்த உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் முதலில் தனக்குத்தானே உண்மையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில், ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற காலகட்டத்தில் தனக்குப் பெண் குழந்தை பிறந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். குழந்தையின் வருகைக்குப் பிறகு குடும்பத்துடன் செலவிடும் நேரம் அதிகரித்ததாகவும், கடந்த சில மாதங்கள் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய அனுபவங்களாக அமைந்ததாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.