டெல்லி சிங்கு எல்லை பகுதியில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிங்கு எல்லை பகுதியில் உள்ள சுவர்களில் கடந்த 6-ந்தேதி சிலர் சர்ச்சைக்குரிய காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில், பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் பகுதியில் வைத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள எஸ்.எப்.ஜே. அமைப்பின் தலைவர் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனின் அறிவுறுத்தலின்படி அவர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், கைது செய்யப்பட்டவர்கள் பிரீத்பால், ஹர்மிந்தர் சிங் மற்றும் ஷீஷ்பால் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரீத்பால், குர்பத்வந்த் சிங் பன்னூனுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரீத்பாலுக்கு எதிராக ஏற்கனவே உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.