பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மற்றும் சென்னை இடையே சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜோத்பூரில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 04815), அக்டோபர் 3-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். ஜோத்பூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், 3-வது நாள் இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04816) இயக்கப்படுகிறது. அக்டோபர் 6-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், 3-வது நாள் இரவு 8.30 மணிக்கு ஜோத்பூரை அடையும். இரு மார்க்கங்களிலும் தலா 9 முறை என மொத்தம் வாராந்திர சேவையாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலில் 19 பெட்டிகள் இடம்பெறும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.