நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்காக அவருக்கு ரூ.110 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன், படத்தின் லாபத்திலும் அவருக்குப் பங்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர் 2’. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முதல் பாகம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் வரும் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் டிக்கெட்டுகள் விரைவாக விற்பனையாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் பெற்றுள்ள ஊதியம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு ரூ.110 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. திரைப்படம் வசூலில் சாதனை படைக்கும் பட்சத்தில், சம்பளம் மற்றும் லாபப் பங்கு உள்ளிட்டவற்றின் மூலம் ரஜினிகாந்தின் மொத்த வருமானம் சுமார் ரூ.180 கோடியை எட்டக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ரஜினிகாந்தின் சம்பளம் மற்றும் லாபப் பங்கு தொடர்பான இந்தத் தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.