ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு வாபஸ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு வாபஸ்

ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு வாபஸ்

தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக் கோரி சென்னை வழக்கறிஞர் சி.ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் வழங்கிய பென் டிரைவை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் வன்கொடுமை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண முடியவில்லை என்றும், இதனால் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய இயலவில்லை என்றும் கூறி, போலீசார் வழக்கை முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், அந்த அறிக்கையை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜெம் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலங்களும் பெறப்பட்டன. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, விசாரணையை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஏற்கெனவே சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதால், மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதி அளித்ததுடன், வழக்கைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.