‘ஜெம் கிரானைட்’ தொழில் அதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு முதல் வீரமணி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகள் சுமார் 23 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. வீரமணிக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த வழக்கை போலீசார் நீதிமன்றத்தில் முடித்து வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த முடிவை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், வீரமணி தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்த விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு ஏன் முடித்து வைக்கப்பட்டது என்பது குறித்தும் தற்போது விசாரணை நடைபெற உள்ளது.