ஜார்க்கண்டில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் இன்று பேரணி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜார்க்கண்டில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் இன்று பேரணி

ஜார்க்கண்டில் அரசுடன் நடந்த  பேச்சுவார்த்தை தோல்வி: சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் இன்று பேரணி

ஜார்க்கண்டில் அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 17-வது நாளாக நீடித்து வருகிறது. மாணவர் பிரதிநிதிகளுக்கும் மாநில அரசுக்கும் இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில், இன்று சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பட்டதாரி நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும், ஆட்சேர்ப்புக்கான முறையான கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், குறிப்பாக சிபிஐ விசாரணை கோரிக்கையை ஏற்கும் விவகாரத்தில் மாணவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.போராட்டத்தை வழிநடத்தி வரும் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும், இன்று நடைபெறும் சட்டப்பேரணி பேரணியில் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.மறுபுறம், மாணவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்க மாநில அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. பொதுப் பணியாளர் தேர்வை ரத்து செய்வதற்கும், தேர்வு முறைகேடுகளுடன் தொடர்புடைய நிதி விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மேலும், தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் விரைவு நீதிமன்ற நடைமுறையை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால், பணியாளர் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முக்கிய கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் இன்று சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்த உள்ளதால், ராஞ்சி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் மாணவர் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.