சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

சென்னை சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனையை 24 மணி நேர மகப்பேறு சிகிச்சை வழங்கும் வகையில், அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையமாக (CEmONC) மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், இன்று (10.11.2026) சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு ஆகியவற்றில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனை கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வருகைப் பதிவுகளை ஆய்வு செய்த அமைச்சர், அவர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை, பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் விவரங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை அமைப்பதற்குத் தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இம்மையத்தை மருத்துவமனையில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 24 மணி நேர மகப்பேறு சிகிச்சை ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 262 படுக்கைகள் உள்ளன. பொதுமக்கள் இங்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சை வழங்கும் சீமாங் மையமாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 83 பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பணிகள் விரைவில் முறைப்படுத்தப்பட்டு, மருத்துவமனை முழுநேரமும் செயல்படுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் வலுப்படுத்தப்படும் கடந்த காலங்களில் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. தற்போது நகர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையும் மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அரசாணைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். டெங்கு தடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நோய் பரவலைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார். தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் பெருகுவதால், வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தேவையற்ற பொருட்களை அகற்றி, நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். கொசு ஒழிப்புப் பணியாளர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டு, தினமும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதிகாரிகள் பங்கேற்பு இந்த ஆய்வின்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ECR பி. சரவணன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஏ. அரவிந்த், மருத்துவமனையின் கூடுதல் நிலைய அலுவலர் டாக்டர் கிறிஸ்டி ஜெயமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.