கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பாக பண்ட்லெண்ட் தன்னாட்சி மாகாணத்தைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் கடற்கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்களை கடத்தி, கொள்ளையடிக்கும் சம்பவங்களில் கடற்கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய கிழக்கு பகுதியில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் சோமாலியா நோக்கி சென்றது. பலாவு நாட்டு கொடியுடன் சென்ற அந்தக் கப்பலில் 17 மாலுமிகள் இருந்தனர். ஏப்ரல் 21-ம் தேதி பண்ட்லெண்ட் மாகாணம் அருகே கப்பல் சென்றபோது, அதனை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இதையடுத்து, கடத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை சோமாலியா கடற்படையினர் இன்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியாவையும், ஒருவர் மியான்மரையும், 3 பேர் பாகிஸ்தானையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த 12 மாலுமிகளும், கச்சா எண்ணெய் கப்பலும் சோமாலியா கடற்படையினரால் மீட்கப்பட்டன.