இந்தியாவின் முக்கிய உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டிகள் இன்று தொடங்கின. மும்பை, இந்தூர், கொல்கத்தா, நியூ சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடர் டிசம்பர் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் லீக் சுற்றில் தகுதி பெற்ற அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். தொடரின் முதல் நாளான இன்று மொத்தம் 16 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் பஞ்சாப் - அரியானா அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் நடைபெற்றது. டாஸில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரமன்தீப் சிங் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து அரியானா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.