விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், வெளியூர்களில் பணியாற்றி வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதையொட்டி பயணிகளின் வசதிக்காக சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா, கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதேபோல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 23 ஆம்னி பஸ்களும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 14 ஆம்னி பஸ்களும் என மொத்தம் 37 பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதிமீறல்களுக்காக அந்த பஸ்களுக்கு மொத்தம் ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்னி பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.