சேலத்தில் களை கட்டிய வண்டி வேடிக்கை... கடவுள் வேடத்தில் வந்த பக்தர்களால் பரவசம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சேலத்தில் களை கட்டிய வண்டி வேடிக்கை... கடவுள் வேடத்தில் வந்த பக்தர்களால் பரவசம்

சேலத்தில் களை கட்டிய வண்டி வேடிக்கை... கடவுள் வேடத்தில் வந்த பக்தர்களால் பரவசம்

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்றம், அலகு குத்துதல், சக்தி அழைப்பு, பொங்கல் வைத்தல் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் முக்கிய நிகழ்வான வண்டி வேடிக்கை நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.இதையொட்டி வண்ணமயமான மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பல்வேறு கடவுள் மற்றும் புராண கதாபாத்திரங்களின் வேடங்களை அணிந்து ஊர்வலமாக வந்தனர்.செவ்வாய்பேட்டை வைஸ்ய நண்பர்கள் குழு சார்பில், கேரள மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை உருவான வரலாற்றை விளக்கும் வகையில் அலங்கார வண்டி அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆதி சங்கரர், மூகாம்பிகை, சொர்ணாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி, பராசக்தி, முனிவர் மற்றும் அரக்கன் போன்ற வேடங்களை பக்தர்கள் தத்ரூபமாக அணிந்து ஊர்வலமாக வந்தனர். இந்த காட்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.மற்றொரு வண்டியில் அமர்நாத் பனிலிங்கத்தை மையமாகக் கொண்டு சிவன், பார்வதி, விநாயகர், சந்திரன் உள்ளிட்ட வேடங்கள் இடம்பெற்றிருந்தன. அப்புசெட்டி தெரு நண்பர்கள் குழு சார்பில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் வேடங்களை அணிந்த பக்தர்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.புராணங்களில் இடம்பெறும் பல்வேறு கடவுள் கதாபாத்திரங்களைப் போல வேடமிட்டு வந்த பக்தர்கள், அதற்கேற்ற பாடல்களுக்கு நடனமாடியபடி சென்றனர். மதுரை வீரன், எல்லையைக் காக்கும் கருப்பசாமி உள்ளிட்ட வேடங்களிலும் பக்தர்கள் பங்கேற்று உற்சாகமாக ஆடினர்.மற்றொரு அலங்கார வண்டியில், கைலாய மலையை தூக்க முயன்று தோல்வியடைந்த ராவணனின் வரலாறு நாடகமாக அரங்கேற்றப்பட்டது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வேடங்களை அணிந்த பக்தர்கள், இந்த நிகழ்வை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.செவ்வாய்பேட்டையில் வசிக்கும் ராஜஸ்தான் வியாபாரிகள் சார்பிலும் வண்டி வேடிக்கை நடைபெற்றது. அவர்கள் பாபா ராம்தேவ் வேடம் அணிந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.ஒவ்வொரு அலங்கார வண்டியின் முன்னாலும் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் மேளதாளத்துக்கு ஏற்ப ஆடியும் பாடியும் உற்சாகமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் சிலர் முயல், கரடி, சிங்கம் உள்ளிட்ட கார்ட்டூன் பொம்மை வேடங்களையும் அணிந்து நடனமாடினர். அவர்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களில் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.அலங்கரிக்கப்பட்ட அனைத்து வண்டிகளும் வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை மெயின்ரோடு வழியாக தேர் நிலையத்தை அடைந்து, பின்னர் தீயணைப்பு நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றன.வண்டி வேடிக்கையை காண செவ்வாய்பேட்டை மட்டுமின்றி அன்னதானப்பட்டி, சூரமங்கலம், குகை, நெத்திமேடு, டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். இதனால் செவ்வாய்பேட்டை மெயின்ரோடு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.நிகழ்ச்சியை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் முடிவில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்த வண்டிகளுக்கு கோவில் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.