பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். இதனிடையே, செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகள் சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட செவிலியர் சங்க நிர்வாகிகள், நவம்பர் 3-ந்தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். நவம்பர் 3-ந்தேதிக்குள் தங்களது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க செவிலியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. உறுதியளித்தபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில், அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.