சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையில் 800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre - GCC) அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளது. இந்தியாவில் அதன் சில்லறை வணிகக் கூட்டு நிறுவனமான டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்திலிருந்து தனித்துச் செயல்படும் வகையில் இந்த மையம் அமைய உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் உலகளாவிய திறன் மையத் துறையில் அதிக ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு மேலும் வலுசேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய திறன் மையங்களின் வளர்ச்சியில் ஸ்டார்பக்ஸ் இணைவது, தொழில்நுட்பம் மற்றும் வணிகச் சேவைகளுக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதையும் வெளிப்படுத்துகிறது. ஒப்பந்த நிகழ்வில் பேசிய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன், இந்தியாவை தங்கள் நிறுவனம் முக்கியமான நாடாகக் கருதுவதாக தெரிவித்தார். சென்னையில் அதிக எண்ணிக்கையிலான திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் இருப்பதும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் நீண்ட காலம் தொடர்வதும் முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர் கூறினார். மேலும், தமிழ்நாட்டின் சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் மாநில அரசு வழங்கும் ஊக்கங்கள் புதிய தீர்வுகளை உருவாக்கவும், நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்கும் உதவும் என்றும் தெரிவித்தார். ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பேசிய முதல்-அமைச்சர் விஜய், சென்னையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய மையத்தை அமைப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற நிறுவனமான ஸ்டார்பக்ஸ் தமிழ்நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை, மாநில இளைஞர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் அவர் கூறினார்.இந்த முதலீடு, இதுபோன்ற முன்னணி நிறுவனங்களை ஈர்ப்பதற்கான சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதை எடுத்துக்காட்டும் என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தின் திறமையான இளைஞர்களுக்கு பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடனான இந்தப் பயணம் நீண்ட காலம் வெற்றிகரமாக தொடர தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்துகள் என்றும் அவர் கூறினார்.