சென்னையின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.3,108 கோடி செலவில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக முதல்வர் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் ஏரிகள், நிலத்தடி நீர் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை, 84 குடிநீர் விநியோக நிலையங்கள் வழியாக மக்களுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் பிரதான குழாய்கள் வழியாக நாளொன்றுக்கு 120 கோடி லிட்டர் குடிநீரை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில் இருந்து தேவை உள்ள பகுதிகளுக்குக் குடிநீரை மாற்றி அனுப்பும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் இதனைச் செயல்படுத்த உள்ளது. மேலும், 40 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் உள்ளடக்கி, மொத்தம் 9 குடிநீர் ஆதாரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட உள்ளன. உந்து நிலையங்கள் மற்றும் குடிநீர் விநியோகக் குழாய்களுடன் கூடிய இந்தத் திட்டத்தின் கீழ், 98 கிலோமீட்டர் தொலைவுக்கு துருப்பிடிக்காத எஃகுக் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.3,108 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை 4 மணிக்கு சோழிங்கநல்லூரில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.