சென்னையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரெயில், கோட்டை ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 5-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதை கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தி, சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்து காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையிலான ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் அனைத்து ரெயில்களும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.