சென்னையில் இந்தியா மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட இரண்டு நாள் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியா - மியான்மர் இடையிலான இந்தக் கூட்டுப் பயிற்சிக்கு 'ராஹத் மித்ரா' (Rahat Mitra) எனப் பெயரிடப்பட்டது. கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இப்பயிற்சியில் இரு நாடுகளின் ராணுவப் படையினரும் பங்கேற்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக, பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் இந்திய ராணுவத்தின் செயல்திறன் எடுத்துக்காட்டப்பட்டது. இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையுடன் இணைந்து செயல்பட்ட ராணுவத்தினர், வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் பொறியியல் குழுக்களின் திறன்களை செயல்விளக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர். இதில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது, போக்குவரத்துத் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தற்காலிகப் பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாகச் சென்றடைவதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டன. மேலும், இந்தியா மற்றும் மியான்மர் வீரர்கள் தங்களது செயல்பாட்டு அனுபவங்களையும் தொழில்முறை சார்ந்த கருத்துகளையும் பரிமாறிக்கொண்டனர். மீட்புப் பணிகளில் பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், மீட்பு செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி வாய்ப்பாக அமைந்தது. இந்தக் கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, பேரிடர் காலத் தயார்நிலை மற்றும் இணைந்து செயல்படும் திறன் மேலும் வலுப்பெற்றுள்ளதாக இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தன்னலத்திற்கு முன்னதாக சேவை' (Service Before Self) என்ற உயரிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, உயிர்களைக் காப்பாற்றவும், மக்களின் துயரங்களைக் குறைக்கவும், எல்லைகளைக் கடந்து மனிதாபிமான உதவிகளை வழங்கவும் இந்திய ராணுவம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.