சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

08 Sep 2026 www.thinathulir.com

சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

சென்னையின் பல்வேறு மண்டலங்களில் குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களுக்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குடிநீர் இணைப்புகள் மற்றும் பொது குழாய்களில் முறைகேடாக மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்தம் 34 மின் மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. தண்டையார்பேட்டை மண்டலத்தில் எம்.கே.பி. நகர், அம்பத்தூர் மண்டலத்தில் ஓ.டி. பஸ் நிலையம் மற்றும் முகப்பேர், அண்ணா நகர் மண்டலத்தில் சூளைமேடு, தேனாம்பேட்டை மண்டலத்தில் வள்ளுவர் கோட்டம், கிரீம்ஸ் ரோடு மற்றும் டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்.ஜி.ஆர். நகர், அடையாறு மண்டலத்தில் தரமணி, பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம் மற்றும் கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் விநியோகத்தில் அழுத்தம் குறைவதைத் தடுத்து, அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் வாரியம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதற்கிடையில், அடையாறு மண்டலத்தில் மட்டும் இதற்கு முன்பு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த 55 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. தற்போது 34 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 89 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு இனி சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பயன்படுத்தக்கூடாது என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறி தொடர்ந்து பயன்படுத்தினால், சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு கண்காணிப்பு குழுவினரின் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.