சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்துக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செய்யூரில், மின் திட்டத்துக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 623 ஏக்கர் நிலம் உள்ளது. இதனுடன் 300 ஏக்கர் புறம்போக்கு நிலமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இரண்டாவது விமான நிலையத்துக்கான இடத் தேர்வில் செய்யூர் முக்கிய இடத்தைப் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் பகுதியும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பழவேற்காடு அருகே இந்தப் பகுதி அமைந்திருப்பதால் சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மேற்கொள்ளும் சாத்தியக்கூறு ஆய்வு முடிந்து, அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகே இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.