சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டப் பணிகள் 5 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவு இன்னும் கிடைக்காததால், கடந்த 4 மாதங்களாக இந்த வழித்தடத்தில் சேவை தொடங்கப்படாமல் உள்ளது. போரூர் சந்திப்பு முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் 91 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது நிலையங்களின் அலங்காரம் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், சுரங்கப்பாதை பணிகளில் 54 சதவீதம் முடிந்துள்ள நிலையில், அப்பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சேவையை இயக்குவதற்குத் தேவையான 35 மெட்ரோ ரெயில்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவை பூந்தமல்லியில் அமைந்துள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களுக்கான சோதனை ஓட்டங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.