தமிழகத்தில் வெப்பநிலை சற்று அதிகரித்துள்ள நிலையில், மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து சில இடங்களில் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. மேலும், அறிவிக்கப்படாமல் சுமார் 2 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுவதால் தொழில் மற்றும் விவசாயத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள சூழலில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மின்வெட்டு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், அவற்றை சரிசெய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், மின்கட்டமைப்பை வலுப்படுத்துதல், அதிகரித்து வரும் மின் தேவையை சமாளித்தல் மற்றும் நுகர்வோர் புகார்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரிய தலைவர் அருண்ராய், பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, மின்னகம் மற்றும் மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தையும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது மின்தடை ஏற்படும் நேரங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மின் உற்பத்தி மற்றும் தற்போதைய மின் தேவை தொடர்பான விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.