சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக, அவர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று (செப்டம்பர் 4) பேச்சுவார்த்தை நடத்துகிறது.பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும், எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை சந்திக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முந்தைய சட்டப்பேரவை அமர்வில் விரைவில் தீர்வு காணப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தும், இதுவரை முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சிரமங்களை அரசு புரிந்துகொண்டுள்ளதாகவும், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதே நேரத்தில், முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுடன் நிதிச்சுமையும் இருப்பதாக அமைச்சர் கூறினார். தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை தனது அறைக்கு இருமுறை அழைத்து, ஒவ்வொரு முறையும் சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சிக் காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் 100 முதல் 150 நாட்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததையும் அமைச்சர் நினைவுபடுத்தினார்.இதற்கு இடையே பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்கள் ஆட்சிக் காலத்தில் அப்போதைய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் போராட்டக் களத்துக்கே நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார். முந்தைய ஆட்சியில் 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றதை அரசு குறிப்பிடும் நிலையில், தற்போதைய போராட்டமும் 100 நாட்களை கடக்கும் வரை காத்திருக்க திட்டமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதையடுத்து மீண்டும் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், அரசு தரப்பில் தேவையான ஆவணங்கள் அனைத்தும் தயாராகிவிட்டதாகவும், தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமைச்சர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ள குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.